'வதந்தியை தடுக்க வேண்டும்' : பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி :'கொரோனா குறித்து வெளியாகும் வதந்திகளை தடுத்து, அந்நோயை எதிர்க்கும் உறுதியை மக்களிடம் விதைக்க வேண்டும்' என, பத்திரிகையாளர்களை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி, நாடு முழுவதும், 11 மொழிகளில் வெளிவரும், தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைகளைச் சேர்ந்த, 20க்கு மேற்பட்ட, மூத்த பத்திரிகையாளர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார். அதன் விபரம்:


கொரோனோவை தடுக்க, சமூகத்தில் இருந்து விலகி, தனியே இருப்பது அவசியம்.மக்களிடம், இது பற்றிய விழிப்புணர்வை, பத்திரிகைகள் ஏற்படுத்த வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, மாநிலங்கள் எடுத்துள்ள முடிவை, வாசகர்களிடம் தெரிவிக்க வேண்டும். உலக நாடுகளில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிடுவது அவசியம். மக்களிடம், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்ட உணர்வை கொழுந்துவிட்டு எரியச் செய்வதில், பத்திரிகைகள் மகத்தான பங்களிப்பை வழங்க வேண்டும்.